சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொண்ட ரெட்டி சாதிச் சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் மாடுமேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்ட ரெட்டி சாதிச் சான்று வழங்க மறுத்தால் தங்கள் பலத்தை சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுவதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் வட்டாரத்தில் கொண்ட ரெட்டி பழங்குடியினர் சாதிச் சான்று வழங்க மேட்டூர் சார் ஆட்சியர் மறுத்து வருகிறார்.
இப்பகுதியில் 1989ஆம் ஆண்டு வரை வட்டாட்சியரால் கொண்ட ரெட்டி சாதிச் சான்று வழங்கப்பட்டு வந்துள்ளது. அதன்பிறகு பழங்குடியினர் சான்று சார் ஆட்சியரால் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது முதல் இம்மக்களுக்கு சாதிச் சான்று வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. சிலர் நீதிமன்றத்தை அணுகி கொண்ட ரெட்டீஸ் சாதிச்சான்று பெற்றுள்ளனர். பெரும்பாலானவர்கள் பொருளாதார நிலை காரணமாக நீதிமன்றம் செல்ல முடியவில்லை. இதனால் இவர்களுக்கு சாதிச் சான்று கிடைக்கவில்லை. சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் கல்வி வேலைவாய்ப்பில் தங்களுக்கு கிடைக்கவேண்டிய முன்னுரிமை பறிபோகிறது என்று கொளத்தூர் வட்டாரத்தில் உள்ள கொண்ட ரெட்டி மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கொளத்தூர் வட்டாரத்தில் கொண்ட ரெட்டிகள் வசிப்பதற்கான அரசுப் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு இவர்களுக்கு சாதிச் சான்று வழங்கப்படுவதில்லை.
இந்தப் பகுதியில் சாதிச் சான்று பெற்றவர்கள் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் பல்வேறு அரசுப் பணிகளில் பணியில் உள்ளனர். தந்தைக்கு வழங்கப்பட்ட சான்று மகனுக்கும், மகளுக்கும் வழங்கப்படுவதில்லை. தற்பொழுது நீதிமன்றம் உத்தரவிட்டும் மேட்டூர் சார் ஆட்சியர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வில்லை.
சாதிச் சான்று கிடைக்காத காரணத்தால் பழங்குடி இன மாணவ மாணவியருக்கு கல்வி வேலைவாய்ப்பில் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் உயர்கல்விக்குச் செல்லமுடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தாங்கள் மாடு மேய்க்கச் செல்வதாகக் கூறி பண்ணவாடி பகுதியில் உள்ள கொண்ட ரெட்டி மாணவ-மாணவியர் வியாழக்கிழமை பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் காவிரிக் கரையில் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வியாழக்கிழமை பண்ணவாடியிலிருந்து பள்ளிச்சீருடையில் கால்நடைகளைக் காவிரிக் கரைக்கு ஓட்டிச் சென்று கால்நடை மேய்க்கும் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இப்போராட்டத்திற்குத் தமிழக அரசு செவிசாய்க்க விட்டால் தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.