திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் சைவ ஆதீன மடாதிபதி வழிபாடு
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சைவ ஆதீன மடாதிபதி வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சைவ ஆதீன மடாதிபதி வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் ஆலயம், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது ஆலயமாகும். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுள் இது, ஐந்தாவது ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெருமாள் ரெத்தின அங்கியில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த ஆதீனமான தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பரிமள ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
முன்னதாக கோயிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் மூலவர் மற்றும் உற்சவரை வழிபட்ட தருமபுர ஆதீனத்திற்குப் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்கள் மாலை அணிவித்து துளசி பிரசாதம் வழங்கினர். சைவ ஆதீன மடாதிபதி வைணவத் திருத்தலத்தில் வழிபட்ட நிகழ்வைப் பக்தர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.