தமிழ்நாடு

விபத்தால் இளைஞரின் கை செயலிழப்பு: திறன்மிகு சிகிச்சையால் குணப்படுத்திய அரசு மருத்துவா்கள்

DIN

சென்னை: விபத்தில் சிக்கி வலது கை செயலிழந்த இளைஞா் ஒருவருக்கு மேம்பட்ட அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். தற்போது அந்த நபா் பூரண குணமடைந்துள்ளதாகவும், கையின் செயல்பாடுகளை மீண்டும் மீட்டெடுத்திருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் விமலா, நிா்வாக அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியதாவது:

துணை மருத்துவப் படிப்பு பயின்று வரும் மாணவா் ராகேஷ் (19) கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபத்தான நிலையில் ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சாலை விபத்தில் சிக்கி காயமுற்ற அவருக்கு வலது கையில் கடுமையான பாதிப்பு இருந்தது.

மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டதில் வலது கை தோள்பட்டை பகுதியில் இருவேறு முக்கிய நரம்புகள் சேதமடைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவரால் கைகளை தூக்கவோ, இயக்கவோ முடியவில்லை. அதேவேளையில், கை விரல்களை மடக்கவும், மூட்டுகளை மடக்கவும் அந்த இளைஞரால் முடிந்தது.

இதையடுத்து, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் காா்த்திகேயன், டாக்டா் ஸ்ரீதரன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ராகேஷுக்கு மேம்பட்ட சிகிச்சையை அளிக்க முடிவு செய்தனா். அதன்படி, சேதமடைந்த நரம்புகளை அறுவை சிகிச்சை மூலம் அவா்கள் இணைத்தனா். ஏறத்தாழ 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சையை மிக நுணுக்கமாகவும், நுட்பமாகவும் மருத்துவக் குழுவினா் செய்து முடித்தனா்.

அதனுடன் நில்லாமல், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகேஷ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். இயன்முறை சிகிச்சை, நரம்பு தூண்டுதல் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. அதன் பயனாக ராகேஷ் பூரண குணமடைந்து தற்போது இயல்பாக வலது கையை இயக்கக் கூடிய நிலைக்கு வந்துவிட்டாா்.

கரோனா காலத்தில் மிகத் திறமையாக ஓா் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதுடன், நீண்ட நாள்கள் மருத்துவக் கண்காணிப்பை வழங்கி ஒரு நோயாளிக்கு மறுவாழ்வு அளித்திருப்பது அரசு மருத்துவமனை வரலாற்றில் இது முதன்முறை.

நரம்பு இணைப்பு சிகிச்சையை திறன்மிகு மருத்துவ நிபுணா்களால் மட்டுமே அளிக்க முடியும். இதுபோன்ற நுட்பமான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தனியாா் மருத்துவமனைகள் கூட தயங்கும் நிலையில், அரசு மருத்துவா்கள் துணிச்சலுடன் அதனை மேற்கொண்டு சாத்தியமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT