தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்க அரசு தவறிவிட்டது: கமல்ஹாசன்

DIN

பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கவும், தடுக்கவும் அரசு தவறி விட்டது என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இளைஞர்கள், மகளிர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நாகை, நாகூரில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சிகளில் அவர் பேசியது: 

நாம் எவ்வளவு மரியாதையாகப் பேசினாலும், சில அரசியல்வாதிகள் மரியாதை இல்லாமல் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். நல்லவர்கள் யார்? கௌரமானவர்கள் யார்? கௌரவம் இல்லாதவர்கள் யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவே இதைக் கருதுகிறேன். நாங்கள் அரசு அமைக்கும்போது  பழிவாங்கும் அரசியலையும், பழிபோடும் அரசியலையும் கையில் எடுக்காமல், வழிகாட்டும் அரசியலைத்தான் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும்.

மக்கள் நீதி மய்ய நிகழ்வுகளில் வெவ்வேறு தரப்பினர் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் பணக்காரர்கள். பணக்காரர்களுக்கான அனைத்து பெருந்தன்மையும் கொண்டவர்கள். காசு வாங்கிக்கொண்டு வந்தோம், சென்றோம் என்று செல்லும் கூட்டம் எங்களிடம் கிடையாது. இது, ஒரு குடும்பம். 

பெண்களுக்கான மரியாதையை அரசு போற்றவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பெண்களை மதிக்கும் அரசாக இருந்தால், பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அதை அரசு செய்யத் தவறி விட்டது. 

பொள்ளாச்சியில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனைக் கிடைக்கவில்லை. அரசின் ஆர்வமின்மையே இதற்குக் காரணம். அதனால்தான் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுள்ளன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மக்கள் நீதி மய்யம் நிச்சயம் அதை மாற்றும். 

உங்கள் நலன், எங்கள் நேர்மை இதுதான் எங்கள் கொள்கை. தமிழகத்தைத் தலைநிமிரச் செய்ய இதுவே போதுமானது. நல்ல அரசு, மக்களுக்கான அரசு அமைய மக்கள் நீதி மய்யத்தின் கரத்தை மக்கள் வலுப்படுத்த வேண்டும். மக்களுக்கான அரசை, மகளிருக்கான அரசை மக்கள் நீதி மய்யம் நிச்சயம் அமைக்கும் என்றார் கமல்ஹாசன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT