தமிழ்நாடு

வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்தக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை: உருமாற்றம் பெற்ற கரோனா பரவி வரும் சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் 14 நாள் தனிமைப்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கரோனா நோய்த் தொற்றுப் பரவத் தொடங்கியது. 

அதனையடுத்து 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாற்றம் பெற்ற கரோனா பரவத் தொடங்கியுள்ளது. 

மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் வியாழக்கிழமை (டிச.31) வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவல் தொடங்கிய காலத்தில், அதாவது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சீனாவில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் கரோனா பரவியது. எனவே உருமாற்றம் பெற்று பரவும் கரோனாவைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து மட்டுமின்றி அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். 

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்து வருகிறது. கடந்த 7 நாள்களில் இங்கிலாந்தில் இருந்து வந்த 1,088 பயணிகளை கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளைப் போல மீண்டும் ஒருமுறை பொதுமுடக்கத்தை மத்திய அரசு அறிவித்தால், மிக மோசமான நிலை ஏற்படுவதுடன், அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிநாடுகளில் இருந்து விமானம், கப்பல் மூலம் வரும் அனைத்து பயணிகளையும் கட்டாயமாக 14 நாள்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும். அல்லது கரோனா பரிசோதனை செய்து அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டால், 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில், அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT