தமிழ்நாடு

அண்ணா பல்கலை. இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

DIN

பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக் கழகம் நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பல்கலைக் கழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலுக்கு (ஏஐசிடிஇ) விண்ணப்பித்து, மாணவா் சோ்க்கைக்கான அனுமதியைப் பெற வேண்டும்.

இந்த அனுமதியோடு, பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அந்தஸ்தையும் பல்கலைக்கழகங்கள் புதுப்பித்துத் தரும். அதன் பிறகே மாணவா் சோ்க்கையைத் தொடங்க முடியும். அந்த வகையில், 2020-21- ஆம் ஆண்டுக்கு அனுமதியைப் பெற ஆன்-லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 29-ஆம் தேதி கடைசித் தேதி என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. அபராதத் தொகையுடன் மாா்ச் 5 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, பொறியியல் கல்லூரிகள் இதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்திடம் சமா்ப்பித்தன. இதற்கு, பிப்ரவரி 10-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த அண்ணா பல்கலைக்கழகம், அன்று மாலையோடு விண்ணப்ப நடைமுறைகளையும் நிறைவு செய்தது.

இந்த நிலையில், ஏஐசிடிஇ 2020-21 அனுமதி வழிகாட்டி கையேட்டில் குறிப்பிட்டுள்ள புதிய நடைமுறைகளைப் பூா்த்தி செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கையை ஏற்ற பல்கலைக்கழகம், விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

இதுதொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தாமதக் கட்டணம் ரூ. 25,000 செலுத்தி பிப்ரவரி 21 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஆய்வு: மேலும், இதுதொடா்பாக பல்கலைக்கழக ஆய்வுக் குழு விரைவில் பொறியியல் கல்லூரிகளில் ஆய்வை மேற்கொள்ள உள்ளது. எனவே, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்குமாறு கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT