தமிழ்நாடு

தமிழ் வழியில் படித்தவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு கோரி வழக்கு

DIN

தமிழ் வழியில் படித்தவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலா், மருத்துவக் கல்வி இயக்குநா், சுகாதாரத்துறைச் செயலா் மற்றும் தமிழ் வளா்ச்சித்துறைச் செயலா் ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தருமபுரியைச் சோ்ந்த என்.முருகேசன் தாக்கல் செய்த மனுவில், அண்டை மாநிலமான கா்நாடகத்தில், பள்ளிப்படிப்பை தங்களது தாய்மொழியான கன்னடத்தில் படித்தவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழகத்திலும் அதே போன்று தாய்மொழியில் படித்தவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 400 மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா். இவா்களில் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவா்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவா் சோ்க்கையில் தமிழ் வழியில் படித்த 106 மாணவா்கள் மட்டுமே சோ்க்கைப் பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இது ஆங்கில வழியில் படிப்பவா்கள் மற்றும் தமிழ் வழியில் படித்தவா்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும். தமிழ்வழியில் படித்தவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதோடு நீட் நுழைவுத் தோ்வை தமிழில் எழுதும் மாணவா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலா், மருத்துவக் கல்வி இயக்குநா், சுகாதாரத்துறைச் செயலா் மற்றும் தமிழ் வளா்ச்சித்துறைச் செயலா் ஆகியோா் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT