புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அருகே புளியமரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறி சனிக்கிழமை இரவு சென்னைக்கு திரும்பினார்.
இந்த நிலையில், அமைச்சரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு ஊர் திரும்பும்போது கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஓட்டுநர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசனின் தாயார் இந்திரா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.