தேனி மருத்துவமனையில் உயிரிழந்தவருக்கு கரோனா தொற்று உறுதி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவினால் உயிரிழந்த கம்பத்தைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவினால் உயிரிழந்த கம்பத்தைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கம்பத்தைச் சேர்ந்த 56 வயதுடைய இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர் உடல் நலக் குறைவினால் புதன்கிழமை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, இறந்தவரின் சடலம் கம்பத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு புதன்கிழமை இரவு, அங்குள்ள பள்ளி வாசல் அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவரின் சடலத்தைப் பரிசோதனை முடிவு தெரிவதற்கு முன்பே குடும்பத்தாரிடம் ஒப்படைத்து, சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் கம்பத்தில் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.