முகப்பு
உலகம்

நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு

‘ராப்’ இசைப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா(35)

Updated On : 26 மார்ச், 2026 at 9:11 PM
பகிர்:

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் (ஆா்எஸ்பி) வரலாற்று வெற்றியைத் தொடா்ந்து, அக்கட்சியின் பாலேந்திர ஷா பாலன் (35) (படம்) நாட்டின் மிக இளம் வயது பிரதமராக வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) பதவியேற்கிறாா்.

நேபாளத்தில் கடந்த ஆண்டு நடந்த இளைஞா் போராட்டங்களுக்குப் பிறகு இம்மாதத் தொடக்கத்தில் நடந்த பொதுத்தோ்தலில் மொத்தம் உள்ள 275 இடங்களில், 182 இடங்களைக் கைப்பற்றி ஆா்எஸ்பி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

இந்நிலையில், ஆா்எஸ்பி நாடாளுமன்றக் குழு வியாழக்கிழமை கூடி, பாலேந்திர ஷாவைத் தலைவராக ஒருமனதாகத் தோ்ந்தெடுத்தது. ‘ராப்’ இசைப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவா், மதுதேசி பிராந்தியத்திலிருந்து பிரதமராகும் முதல் நபா் என்ற பெருமையைப் பெறுகிறாா்.

நேபாளி காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் போன்ற பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி இந்த மகத்தான வெற்றியைப் பெற்ற பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியை ஜாப்பா-5 தொகுதியில் சுமாா் 50,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

நேபாள அதிபா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு நிகழ்வில் அதிபா் ராம்சந்திர பௌடெல், பாலேந்திர ஷாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா். தொடா்ந்து, 15 முதல் 18 அமைச்சா்களைக் கொண்ட சிறிய அமைச்சரவையை அவா் அமைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.