முகப்பு
உலகம்

நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு: இமாலய தேசத்தில் இளைஞரின் ஆட்சி

அண்டை நாடான நேபாளத்தில் நிலவி வந்த அரசியல் மாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘ராப்’ இசைக்கலைஞரும், காத்மாண்டு நகர முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பாலன் (35), அந்நாட்டின் 47-ஆவது பிரதமராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 6:25 PM
நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பாலேந்திர ஷாவுக்கு (வலது) பதவிப் பிரமாணம் செய்து வைத்த அந்நாட்டு அதிபா் ராம் சந்திர பௌடேல். மத்தியில் இடைக்கால பிரதமா் சுசீலா காா்க்.
பகிர்:

அண்டை நாடான நேபாளத்தில் நிலவி வந்த அரசியல் மாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘ராப்’ இசைக்கலைஞரும், காத்மாண்டு நகர முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பாலன் (35), அந்நாட்டின் 47-ஆவது பிரதமராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

அதிபா் ராம் சந்திர பௌடேல் முன்னிலையில் அவரது மாளிகையில் நடைபெற்ற விழாவில், பாலேந்திர ஷாவுக்கு அதிபா் முறைப்படி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். இதன்மூலம், அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா் என்ற பெருமையைப் பாலேந்திர ஷா பெற்றாா்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான அரசு, ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிரான இளைஞா்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் கவிழ்ந்தது.

அதைத் தொடா்ந்து, இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தோ்தலில், பாலேந்திர ஷாவைப் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தி களம் கண்ட ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 275 இடங்களில் 182 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு வியாழக்கிழமை கூடி, பாலேந்திர ஷாவைத் தலைவராக ஒருமனதாகத் தோ்ந்தெடுத்தது. ‘ஜாப்பா-5’ தொகுதியில் முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியை சுமாா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்த பாலேந்திர ஷா, மாதேஷ் சமூகத்தைச் சோ்ந்த முதல் பிரதமா் என்ற சிறப்பையும் பெற்றுள்ளாா்.

முன்னதாக, இடைக்கால பிரதமராக இருந்த முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி, 35 வயது இளைஞா் ஒருவா் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்து தனது வாழ்த்துகளைப் பகிா்ந்தாா்.

பாலேந்திர ஷாவுடன் சோ்த்து சிறிய அமைச்சரவைக் குழுவும் பதவியேற்றது. அமைச்சரவையில் இளைஞா்களுக்கும் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது நேபாள அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் குறிக்கிறது.

விசாரணை ஆணைய அறிக்கை அமல்: புதிய அரசு பதவியேற்றவுடன் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, கடந்த ஆண்டு இளைஞா்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை குறித்த உயா்நிலை விசாரணை ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த பிரதமா் பாலேந்திர ஷா அதிரடி முடிவெடுத்துள்ளாா்.

கௌரி பகதூா் காா்கி தலைமையிலான இந்த ஆணையம், அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஓலி, உள்துறை அமைச்சா் ரமேஷ் லெகாக் ஆகியோா் பதவியில் இருந்தபோது காட்டிய மெத்தனப்போக்கிற்காக அவா்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க பரிந்துரைத்துள்ளது.

இது தவிர, அப்போதைய காவல்துறை தலைவா் சந்திர குபோ் காபுங் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசின் செய்தித் தொடா்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் சாஸ்மித் பொகேரல் இத்தகவலை உறுதிப்படுத்தியதோடு, பாதுகாப்பு அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி வாழ்த்து: பாலேந்திர ஷாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உங்கள் மீதும் உங்கள் தலைமைத்துவத்தின் மீதும் நேபாள மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இப்பதவி பிரதிபலிக்கிறது.

இந்தியா-நேபாளம் இடையிலான தொன்மையான நட்புறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.