முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் உறுதி

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

அறந்தாங்கி அருகே 7-வயது பெண் குழந்தை கொலை    

புதுக்கோட்டை  மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல்  மேல குடியிருப்பு கிராமத்தைச்  சேர்ந்த நாகூரான்- செல்வி இவர்களின் 7 வயது மகள் ஜெயப்பிரியா என்பவர் நேற்றைய தினம் காணாமல் போனதாக ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று 01.07.2020 மதியம் 4.00 மணி அளவில் ஏம்பல் கிளவிதம்மம் ஊரணியில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில்  இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ராஜா(27) என்பவரை  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.வே.அருண்ஷக்தி குமார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் குழந்தை  வன்புணர்வு செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது,  இதற்கிடையே குழந்தையின் சொந்த ஊரான ஏம்பல் கிராமத்தில்  இந்த சம்பவத்தில் வேறு சிலர் ஈடுபட்டிருக்கலாம் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என மக்கள் காலை முதல் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.