தென்மண்டல ஐ.ஜி.யாக மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார் முருகன்
தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட முருகன், இன்று மதுரையில் ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதுரை: தென்மண்டல ஐஜியாக பணியாற்றிவந்த சண்முகராஜேஸ்வரன் ஓய்வுபெற்ற நிலையில், சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த முருகன் மதுரையில் தென்மண்டல ஐஜியாக வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சண்முக ராஜேஸ்வரன் ஜூன் 30-உடன் ஓய்வு பெற்றதால் தென் மண்டல புதிய ஐஜியாக முருகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இவர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்தார்.
இதையடுத்து, இன்று அவர் தென்மண்டல ஐ.ஜி.யாக மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவத்தில் நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அந்த சம்பவத்திற்கு அடுத்து சாத்தான்குளத்திற்கு சென்றுவந்தேன். மீண்டும் அங்கு செல்லவுள்ளேன். சிபிசிஐடி விசாரணைக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். லாக்-அப் டெத் என்பதே நடக்கக் கூடாது. எப்போதாதவது நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் கலங்கம் ஏற்படுகிறது. அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
தற்போது சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீஸார் 48 மணிநேரத்தில் தானாகவே பணியிடை நீக்கமாவார்கள். தேவைப்படும்பட்சத்தில் திருச்சியில் காவல்துறையினருக்கு மனநலப் பயிற்சி அளிக்கப்படுவது போல, தூத்துக்குடி காவல்துறையினருக்கும் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இவர் 2015-இல் தென்மண்டல ஐஜியாக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.