கூத்தாநல்லூர்: கரோனா கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கூத்தாநல்லூரில் கரோனா கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, கரோனா கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். கோரிக்கை மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இதுகுறித்து மாநில துணைத் தலைவர் சேகர் பத்திரிகையாளர்களிடம் கூறியது.
கரோனா தொற்று நோய் ஏற்பட்டு 4 மாதங்களாகிறது. இந்த 4 மாதத்தில், அறிவிக்கப்பட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டடத் தொழிலாளர்களுக்கு 50 சதவீத நிவாரணத் தொகைகூட இன்னும் வழங்கப்படவில்லை. மேலும், ஒரு மாதக் காலத்திற்கு கரோனா தொற்று நோய்க்கான தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் தொழிலாளர்கள் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். நல வாரிய அலுவலகப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளன. பதிவுகள் மட்டும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.
புதுப்பிப்பதுதான் மிகவும் முக்கியமானது. முதியோர் உதவித் தொகை வாங்கக் கூடியவர்கள் பலர் புதுப்பித்தல் செய்யவில்லை. அதுபோன்று புதுப்பித்தல் செய்யாமல் இருந்தால் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், புதுப்பிக்கும் பணியை அரசு உடனே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில், கட்டடப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நெசவு, தையல், மண்பாண்டம் செய்தல், கதர் வாரியம் உள்ளிட்ட 17 நல வாரியங்கள் உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில், 18 ஆயிரம் பேர்தான் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ள 18 ஆயிரத்தில், 9 ஆயிரம் பேருக்குத்தான் நிவாரணம் வழங்கியுள்ளனர். மீதி 9 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவில்லை. வங்கிக் கணக்குப் புத்தகத்தை வாங்கிக் கொண்டுதான் பதிவு செய்கிறார்கள். ஆனால் இப்போது, வங்கிப் புத்தகம் இல்லை எனச் சொல்லி, ரேஷன் கடையில் பதிவு செய்யச் சொல்கிறார்கள். அஞ்சலகத்தில் பதிவு செய்து வாருங்கள் எனப் பலவிதமான காரணங்களைச் சொல்லி தொழிலாளர்களை அலைக்கழிக்கிறார்கள். படிப்பறிவு இல்லாத தொழிலாளர்கள் பலர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், கட்டுமானத்திற்குரிய மூலப்பொருட்கள் அனைத்தும் விலையேற்றத்துடன், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன. கட்டடத் தொழிலாளர்கள் பல்வேறு வகையிலும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கரோனா நிவாரண நிதியாக நல வாரிய அடையாள அட்டை பதிவு பெற்ற நடைமுறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கப்படுவதாக அரசு அறிவித்ததில் 50 சதவீதத்தினர்தான் பயன் அடைந்துள்ளனர். விடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடனே கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பக்கிரிசாமி, மாநில விவசாயத் தொழிலாளர்கள் கட்சி மாவட்டப் பொருளாளர் தர்மராஜ், நகரத் தலைவர் வி.பன்னீர்செல்வம், துணைத் தலைவர் தனபால் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.