நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக் கோரி விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை பூந்தோட்டத்தில் தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிஎன்சிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுயநலத்திற்காக தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத இடங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை பூந்தோட்டத்தில் தமிழக விவசாயிகள் நல சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள மோட்டாத்தூர் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் ஜி.சேதுராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் சேதுராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சி குறுவை சாகுபடி இப்போதுதான் நடைபெற்று வருகிறது. குறுவை அறுவடை இன்னும் துவங்கவில்லை. மேலும் தற்போது கரோனாத் தொற்று எங்கு பார்த்தாலும் பரவிவருகிறது. தமிழக அரசும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
எனவே தேவையில்லாத காலகட்டத்தில், தேவையில்லாத இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எதற்காக திறந்திருக்கிறது எனத் தெரியவில்லை. வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்து அதன்மூலம் சொந்த லாபம் அடைவதற்காக அதிகாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும் வியாபாரிகள் வெளிமாவட்ட விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நெல்லைக் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வெளி மாவட்ட விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். எனவே கரோனாத் தொற்று பரவி வருகின்ற நேரத்தில், தேவையில்லாத காலகட்டத்தில், தேவையில்லாத இடங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக மூடி ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும்.
அதேபோல கரோனா பாதிப்பு காலத்தில் பொருளாதார பாதிப்புக்குள்ளான தமிழக அரசையும், குறைந்த விலைக்கு நெல்லை விற்பனைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள வெளிமாவட்ட விவசாயிகளையும் பாதுகாத்திட வேண்டும் எனத் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தினுடைய மாநிலச் செயலாளர் ராமமூர்த்தி, மாநிலப் பொருளாளர் முருகேசன் உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.