தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பாலி புரோபைலின் துணியில் முகக்கவசங்கள்!

சா. ஜெயப்பிரகாஷ்

புதுக்கோட்டை: கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அவசியம் என்ற உலகளாவிய விதிமுறைப்படி, தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு பயன்படுத்தப்படும் - பயன்பாட்டுக்குப் பின்னர் வீசியெறியப்படும் கோடிக்கணக்கான முகக்கவசங்கள், தமிழக அரசால் கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட 14 வகையான பாலித்தீன் பொருள்களில் ஒன்றான "பாலி புரோபைலின்' துணியாலானவை.

நீண்ட கால சூழலியலாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பொருள்களை தமிழக அரசு தடை செய்தது.  வழக்கமான பிளாஸ்டிக் பொருள்கள் கூட நேரடியாக பிளாஸ்டிக் தயாரிப்பாகத்தான் இருக்கும், கொஞ்சம் முயன்றால் அவற்றை மறுசுழற்சி செய்ய முடியும். 

ஆனால், நெய்யப்படாத "நான் ஓவன்' என்றழைக்கப்படும் "பாலி புரோபைலின்' துணி வகையில் 40 சதவிகிதம் வரை பிளாஸ்டிக் கலப்பு இருக்கிறது. 

இதனைப் பிரித்தெடுக்கவே முடியாது. எனவே, மறுசுழற்சி செய்யவே முடியாத இந்த வகையான துணி நியாயப்படி, முதலில் தடை செய்யப்பட வேண்டியது என அப்போதே சூழலியலாளர்கள் தெரிவித்தனர்.

இப்போது கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பிரபலங்கள் முதல், அடிப்படைப் பணியாளர்கள், பொதுமக்கள் வரை பயன்படுத்தும் எளிமையான முகக்கவசம் என்பது "சர்ஜிக்கல் மாஸ்க்' என்றழைக்கப்படும்  இவை "பாலி புரோபைலின்' துணியால் தயாரிக்கப்பட்டவை. வெளிர் நீலம் மற்றும் வெளிர் பச்சை நிறத்தில் இந்த முகக்கவசங்கள் பெருமளவில் தற்போது புழக்கத்தில் உள்ளன. ஒப்பீட்டளவில் மற்ற வகையான முகக்கவசங்களை விடவும் மிகக் குறைவான விலை. ரூ. 3-க்கு உற்பத்தி விலை என்பதால் அதிகபட்ச விலையாக ரூ. 10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த முகக்கவசம் 99 சதவீதம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் பயன்பாடாகத்தான் உள்ளது. அப்படியானால் நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் இந்த முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டு இந்த மண்ணில் வீசப்பட்டு வருகின்றன. 

இவையனைத்தும் 99 சதவிகிதம் மண்ணில் புதைந்தும், நீர்நிலைகளில் கலந்தும்தான் காணப்படுகின்றன.

இதே எண்ணிக்கையில் நெய்யப்படாத துணியால் ஆன இந்த முகக்கவசங்கள் வீசப்படுமானால், அவை புவியின் இயல்பான சூழலில் கடுமையான தாக்குதலை ஏற்படுத்தும் என்றும் சூழலியலாளர்கள் அச்சப்படுகின்றனர். 

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ. சுந்தரராஜன் கூறியது:
தடை செய்யப்பட்ட நெய்யப்பட்ட துணியால் ஆன முகக்கவசங்கள் இதே வேகத்தில் பயன்படுத்தப்படுமானால், சில ஆண்டுகளுக்குப் பிறகு கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கையை விடவும் வீசியெறியப்பட்ட முகக்கவசங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய எண்ணிக்கையில் வீசியெறியப்படும் இந்த வகை முகக்கவசங்கள் குறித்த அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். மாற்று ஏற்பாடுகளை அரசே செய்ய வேண்டும். வீசியெறியப்படும் முகக்கவசங்களை சேகரித்து அழிப்பதற்கான ஆய்வையும் மேற்கொண்டு செய்ய வேண்டும் என்றார் சுந்தரராஜன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT