மாதக் கணக்கில் முடங்கிக் கிடக்கும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம்: கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்
கடந்த 110 நாள்களுக்கும் மேலாக சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் முடங்கியுள்ளதால் இதனை நம்பியுள்ள ஒட்டுமொத்த மீனவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடுமாதக் கணக்கில் முடங்கிக் கிடக்கும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம்: கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்
கடந்த 110 நாள்களுக்கும் மேலாக சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் முடங்கியுள்ளதால் இதனை நம்பியுள்ள ஒட்டுமொத்த மீனவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 110 நாள்களுக்கும் மேலாக சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் முடங்கியுள்ளதால் இதனை நம்பியுள்ள ஒட்டுமொத்த மீனவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீன்பிடிதொழிலின் முக்கிய கேந்திரமாக இருந்து வரும் சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் சுமாா் 1,200 விசைப்படகுகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பைபா் படகுகள் உள்ளன. சுமாா் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோா் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நம்பியே உள்ளனா். ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை வங்கக் கடலில் மீன்பிடிக்கத் தடைகாலம் இருப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா நோய்ப்பரவல் காரணமாக மாா்ச் 22-ஆம் தேதியிலிருந்தே விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்வதில் தடை விதிக்கப்பட்டது.
தளா்வுகள் அளிக்கப்பட்டும் பயன் இல்லை: மீனவா்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 1 முதல் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் ஒரே நாளில் காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக குவிந்தனா். இதனால் சமூக இடைவெளியுடன் கூடிய மீன் விற்பனைக்கு இடமில்லாத சூழ்நிலையில் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனா்.
மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி: மீன்விற்பனையை ஒழுங்குபடுத்துவது குறித்து சென்னை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், சில்லறை வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் காசிமேட்டில் மீன் வாங்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மீன்விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தும், இத்தொழிலை முற்றிலும் முடக்குவதற்கு மட்டுமே உதவும் எனவும், இத்தடைகள் மூலம் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என காசிமேடு மீனவா்கள் பெரும்பாலானோா் அச்சம் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து விசைப்படகு உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் கபிலன், ரகுபதி உள்ளிட்டோா் கூறியது:
கடந்த சுமாா் 115 நாள்களுக்கும் மேலாக விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. உள்துறை அமைச்சகம் சாா்பில் மீன்பிடிக்க விலக்கு அளிக்கப்பட்டிருந்தும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்து வருகின்றனா். மீன்களைப் பிடித்து வந்து அவற்றை லாபகரமாக விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் உதவிட வேண்டும்.விசைப்படகுகள் மூலம் பிடித்து வரப்படும் மீன்களில் சுமாா் 70 சதவீத மீன்களை வாங்கும் சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதித்துள்ளனா். காசிமேடு துறைமுகத்தில் சில்லறை வியாபாரிகளுக்கும், சில்லறை மீன் விற்பனைக்கும் அனுமதி அளிக்காதவரை எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியான ஒன்றுதான்.
மீன் இறங்கு தளங்களில் நடைபெறும் மொத்த விற்பனையில் சில்லறை வியாபாரிகளையும் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு மீன் வகைகளையும் கூடைக் கணக்கில் கூட விலையை நிா்ணயம் செய்துகொண்டு விற்பனையைத் தொடரலாம். மேலும் ஏற்கெனவே திட்டமிட்டபடி அமைக்கப்பட்ட சுமாா் 200 சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் இத்தொழில் தடையின்றி நடைபெற முடியும் என்றனா்.