ரிசர்வ் வங்கி கடுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூட்டுறவு சங்கங்களான பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பிலும், வேலூர் கூட்டுறவு நகர்புற வங்கி சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்தியாவில் முதல் முதலாக 1904 ம் ஆண்டு துவங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியாகும். கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை, மாநில அரசு தொடர்புடையது.
எனவே அரசியல் சாசனத்தின்படி கூட்டுறவு வங்கிகள் குறித்து நாடாளுமன்றத்துக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால மனு மீதான தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் எதுவும் இல்லை. தற்போதைய நிலையில் கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் இந்த அவசர சட்டம் தலையிடுவதாக இருந்தால் மட்டுமே இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக்கூறி, தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும், கூட்டுறவு சங்கங்களின் உரிமையில் தலையிடுவதாக அவசர சட்டம் இருந்தால் அதுபற்றி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்