மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆடி அமாவாசை யாகம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆடி அமாவாசை யாகம் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆடி அமாவாசை யாகம் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையன்று கோயில் யாகசாலையில் யாகம் நடத்தப்படும். ஆடி மாதம் அமாவாசையன்று நடத்தப்படும் யாகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த யாகத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில் மூடப்பட்டு வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறுகின்றன. ஆடி அமாவாசையை முன்னிட்டு வழக்கம்போல் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டியும் கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டியும் யாகம் நடைபெற்றது. கோயில் யாகசாலையில் நடைபெற்ற இந்த யாகத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
தஞ்சை குருஜீ கணபதிசுப்ரமணியம் யாகத்தை நடத்தினார். யாக குண்டத்தில் பூமாலைகள், திரவியப் பொருள்கள், இனிப்பு வகைகள், பட்டுப்புடவைகள், வெள்ளி, தங்கம், பழ வகைகள் உள்ளிட்ட பல பொருள்கள் இடப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடு நடந்தது. அதன்பின் பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீரால் பாதசமர்ப்பணம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் மாதாஜி ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.