சேலத்தில் 27 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக மருந்துகளை விநியோகித்த ஹோமியோபதி மருத்துவர்
சேலம், தம்மம்பட்டி உள்ளிட்ட 20 ஊர்களில் 27ஆயிரம் குடும்பத்தினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல ஆர்சினிக்கம் ஆல்பம் 30 சி மருந்தை இலவசமாக வழங்கியுள்ளார் தம்மம்பட்டி ஹோமியோபதி மருத்துவர் சக்திவேல்.
சேலம், தம்மம்பட்டி உள்ளிட்ட 20 ஊர்களில் 27 ஆயிரம் குடும்பத்தினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல ஆர்சினிக்கம் ஆல்பம் 30சி மருந்தை இலவசமாக வழங்கியுள்ளார் தம்மம்பட்டி ஹோமியோபதி மருத்துவர் சக்திவேல்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் ஹோமியோபதி மருத்துவர் சக்திவேல்(37). கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஹோமியோபதி மருத்துவமனையை சிறிய அளவில் நடத்தி வருகிறார். தற்போது வேகமாக உலகளவில் பரவிவரும் கரோனா நோய் தொற்றானது நோய் எதிர்ப்பு சக்தியில்லாத மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசும், தமிழக அரசும் நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல ஆர்சினிக்கம் ஆல்பம் 30 சி மாத்திரைகளை வழங்கலாம் என்று இரு மாதங்களுக்கு முன் அறிவித்தது. தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இந்த மாத்திரை குறித்து விழிப்புணர்வு வாட்ஸ்அப் உள்ளிட சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. அதன் தொடர்ச்சியாக கரோனா நோய் தொற்று குறைவாக உள்ள ஊர்களில் இம்மருந்து குப்பி ரூ.50க்கும், நோய் தொற்று அதிகம் பரவும் ஊர்களில் ரூ.200க்கு அதிகமான விலைக்கும் விற்பனையானது. பல ஊர்களில் இந்த மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஏழை,எளிய மக்களுக்கு இந்த மருந்து கிடைப்பது சிரமமாக இருந்து வந்தது.
இந்நிலையில் தம்மம்பட்டி உள்ளிட்ட 20 ஊர்களின் மக்களுக்கு இம்மாத்திரைகளை வழங்க முடிவெடுத்து இரவு, பகல் பாராது தனது குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன், 27 ஆயிரம் மருந்துக் குப்பிகளை தனது வீட்டிலேயே தயார் செய்தார் மருத்துவர் சக்திவேல். தம்மம்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வீடு வீடாக பத்தாயிரம் குடும்பங்களுக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தி தரவல்ல மருந்துகள் விநியோகிக்கப்பட்டது. அரசின் பதிவுபெற்ற ஹோமியோபதி மருத்துவரான சக்திவேல், இதுவரை 27 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக மருந்துகளை விநியோகம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஹோமியோபதி மருத்துவர் சக்திவேல் கூறியதாவது, “நம்மை சுற்றியுள்ள மக்கள் நன்றாக இருக்கவேண்டும்,உயிர்வாழ வேண்டும் என்பதற்காக,இந்த மருந்தை முழுமையாக வழங்கிவிடவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். மருந்தை விநியோகிக்க தன்னார்வலர்கள் பலர் முன்வந்தனர். அவர்கள் வீடுவீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல இந்த மருந்தை வழங்கி உதவினார்கள்.மேலும் சில ஊர்களில் நானே நேரிடையாகச்சென்று வீடுவீடாக விநியோகித்தேன்.
தம்மம்பட்டி பேரூராட்சி மட்டுமல்லாமல், ஆரியபாளையம், திம்மநாய்க்கன்பட்டி,சோமம்பட்டி,கோபாலபுரம், மத்ரூட், வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையார்மதி, உலிபுரம், நாகியம்பட்டி ஆகிய ஊர்களில் தன்னார்வலர்கள் மூலமும் சமயபுரம், துறையூர் அருகே சிக்கத்தம்பூர்பாளையம், பெரம்பலூர் அருகே சின்னாறு ஆகிய ஊர்களில் எனது கிளினிக்கிற்கு வருபவர்கள் மூலமும் இலவசமாக இம்மருந்தினை வழங்கினேன்.
சென்னையில் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் 3000 குடும்பங்களுக்கு வழங்கியது என்பது உள்பட இதுவரை 27,000 குப்பிகளை இலவசமாக வழங்கியுள்ளேன். மதுரையில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் இலவசமாக படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என்னை மருத்துவராக்கி அழகு பார்த்த தமிழக அரசிற்கு,சிறு பிரதி உபகாரமாக இதைக் கருதுகிறேன். இந்த சேவைக்கு வாய்ப்பளித்த,தமிழக அரசிற்கும், வடலூர் வள்ளல்பெருமானுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.