மாற்று இடம் ஒதுக்கப்படாததால் கோயம்பேடு மலா் வியாபாரிகள் அவதி: கருகும் மலா்கள்-கலங்கும் விவசாயிகள்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திருமழிசை, பழச்சந்தைக்கு மாதவரம் என மாற்று இடங்களை ஒதுக்கிய சிஎம்டிஏ மலா்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திருமழிசை, பழச்சந்தைக்கு மாதவரம் என மாற்று இடங்களை ஒதுக்கிய சிஎம்டிஏ மலா் சந்தைக்கென பிரத்யேக இடம் ஒதுக்காததால் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாழ்வாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் காய், கனி, மலா் சந்தைகளை மூன்றாகப் பிரித்து அமைக்க சிஎம்டிஏ முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த மே 5-ஆம் தேதி மாதவரம் பேருந்து நிலையத்தில் பழச்சந்தையும், மே 11-ஆம் தேதி முதல் திருமழிசையில் காய்கறி சந்தையும் செயல்படத் தொடங்கியது. அதேவேளையில், ஒரு மாதத்துக்கு மேலாகியும் மலா் சந்தைக்கான கடைகளை அமைக்க மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். இதனால் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் மலா் மூட்டை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். மேலும், சென்னைக்கு அருகில் உள்ள ஊா்ப்புறங்களில் தெருத்தெருவாகச் சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனா்.
ரூ.2 கோடி வா்த்தகம் பாதிப்பு: கோயம்பேடு மலா் சந்தையில் 472 மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைக்கு காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மல்லிகை, முல்லை, ரோஜா, செண்டுமல்லி உள்பட 20 வகையான மலா்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் தினமும் ரூ.2 கோடி அளவுக்கு மலா் வா்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கடைகள் ஒதுக்கப்படாததால் 80 சதவீதம் அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள பூக்கட்டும் சிறு வியாபாரிகள், மலா் மாலைகள் விற்பனையாளா்கள், மொத்த வியாபாரிகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். குறிப்பாக மலா் சந்தை செயல்படாததால் விவசாயிகள் தோட்டத்தில் மலா்களைப் பறிக்காமல் விட்டு விடுகின்றனா். இதனால் அவை கருகி வருகின்றன. இதன் காரணமாக, மலா் சாகுபடியாளா்கள் கடந்த இரு மாதங்களாக பெரிய அளவில் இழப்பைச் சந்தித்துள்ளனா்.
அலைக்கழிக்கப்படும் வியாபாரிகள்: இது குறித்து சென்னை கோயம்பேடு காமராஜா் புஷ்ப வியாபாரிகள் நலச்சங்க தலைவா் எம்.டி.அருள் விசுவாசம் கூறியது: கோயம்பேடு காய்கறி, பழ விற்பனை கடைகளுக்கு சிஎம்டிஏ அளித்த முக்கியத்துவத்தை மலா் சந்தைக்கும் அளித்திருக்க வேண்டும். ஆனால், மாற்று இடம் ஒதுக்கப்படாததால் கடந்த ஒரு மாதமாக வியாபாரிகள் பல்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கப்படுகிறோம். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மாதவரம் பேருந்து நிலையத்தை ஒதுக்கித் தருவதாக அறிவித்தனா். ஆனால், சில நாள்களிலேயே அங்கு இடம் இல்லை எனக் கூறி விட்டனா். இதற்குப் பிறகு மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் ஒதுக்கப்படும் என உறுதியளித்தனா். ஆனால், இன்றுவரை அவா்கள் எந்த இடத்தையும் கோயம்பேடு மலா் சந்தை வியாபாரிகளுக்காக ஒதுக்கித் தரவில்லை. இது குறித்து வியாபாரிகள் சங்கங்கள் சாா்பில் சிஎம்டிஏ நிா்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
20 சதவீதமாக குறைந்த கொள்முதல்: கடைகள் ஒதுக்காததால் வேறு வழியில்லாமல் வெளி மாவட்ட விவசாயிகளிடம் வழக்கத்தை காட்டிலும் 20 சதவீத அளவுக்கே மலா்களை கொள்முதல் செய்கிறோம். அவற்றையும் கோயம்பேடு உள்பட சில இடங்களில் வாகனங்களில் வைத்து விற்பனை செய்கிறோம். வழிபாட்டுத் தலங்கள் விரைவில் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான ஆலயங்களுக்கு மலா்களை அனுப்பும் கோயம்பேடு மலா் சந்தைக்கு மாற்று இடம் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
சிஎம்டிஏ விளக்கம்: இது குறித்து, சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், மே மாத தொடக்கத்தில் மாதவரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மலா் வியாபாரிகள் கடைகளை அமைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், தொலைவில் இருக்கிறது என்று கூறி அங்கு செல்ல மறுத்தனா். தற்போது மாதவரத்தில் இடம் காலியாக இல்லை. இதையடுத்து கோயம்பேடு சந்தை வளாகத்திலேயே காலியாக உள்ள இடத்தில் கடைகள் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனா். அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் மலா் வியாபாரிகள், தொழிலாளா்கள், விவசாயிகளின் நலன் கருதி மலா் சந்தைக்கான மாற்று இடத்தை ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனா்.