வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் ? உயர்நீதிமன்றம் கேள்வி
வெளிநாடுகளில் சிக்கி, சொந்த ஊர்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடுவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் ? உயர்நீதிமன்றம் கேள்வி
வெளிநாடுகளில் சிக்கி, சொந்த ஊர்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கி, சொந்த ஊர்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60 ஆயிரத்து 942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், தமிழக அரசு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 2 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் உள்ளவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விமானங்களைத் தரையிறக்க எத்தனை விமான நிறுவனங்கள் தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளன, அந்த கோரிக்கைகள் மீது தமிழக அரசு எடுத்த முடிவு என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 40 ஆயிரத்து 433 தமிழர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதி கோரி இந்திய தூதரகங்களில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 65 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். 26 ஆயிரத்து 368 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழர்களை மீட்டு வர எத்தனை விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறித்தோ, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு விமானக் கட்டணத்துக்கான நிதி உதவி, உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்து மத்திய அரசு அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம் அதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் , வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.