சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் வெள்ளிக்கிழமை ஒரு குழியிலிருந்து குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கி வைக்கப்பட்டது.
பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணி மீண்டும் மே 20-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை, கீழடியில் விலங்கின எலும்பு, கொந்தகையில் முதுமக்கள்தாழியில் மனித எலும்பும்புகள், அகரத்தில் மண் பானைகள் என அடுத்தடுத்து பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் தமிழார்வலர்கள் மத்தியில் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அகரத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கொந்தகையில் ஒரே குழியில் 2 முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வில் கொந்தகை பழங்காலத்தில் ஈமச்சடங்குகள் செய்யும் ஈமக்காடாக இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கீழடியில் ஏற்கனவே கண்டறியப்பட்ட இரு மண்பானைகள் கிடைத்த இடத்தின் அருகிலேயே தண்ணீர் செல்வதற்கான வடிகால் வசதி அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது கொந்தகையில் தோண்டப்பட்ட அகழாய்வு குழியிலிருந்து முதல்முறையாக குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 75 செ.மீ உயரமுள்ளது.
ஏற்கனவே கீழடியில் விலங்கின எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் கொந்தகையில் அடுத்தடுத்து மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டபோதும் தற்போது இங்கு குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது எனவும் இது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு என்றும் அதை ஆய்வு செய்து வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.