புதுச்சேரி அரசின் உத்தரவைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் பிற்பகல் 2 மணியுடன் மூடப்பட்டதால் நகரப் பகுதி வெறிச்சோடியது.
புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை முதல் கரோனா பரவல் தடுப்புக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிப்பு செய்தார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, மாவட்டத்தில் அரசின் அறிவிப்பை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டியது குறித்து விவரங்களை திங்கள்கிழமை பட்டியலிட்டார்.
இதன்படி காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து கடைகள், நிறுவனங்கள் (மதுபான கடைகள், பெட்ரோல் பங்க் உட்பட) செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு திறக்கத் தொடங்கி பிற்பகல் 2 மணியோடு மூடப்பட்டன. பிற்பகல் 2 மணி வரை உணவகங்களில் சாப்பிட அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 8 மணி வரை பார்சல் வழங்க அனுமதிக்கப்பட்டதை ஏற்று உணவகத்தார் செயல்பட்டனர்.
பொது முடக்கத் தளர்வுக்குப் பின் காரைக்கால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தொடங்கிய நிலையில், இதுவும் 10 நாட்கள் மூடப்படும் என்ற அறிவிப்பால் காவல்துறையினர் கடற்கரை சாலைகளில் தடுப்புகளை அமைத்து காவல் பணியை மேற்கொண்டனர்.
அரசு அலுவலகங்கள், வங்கி உள்ளிட்ட பணிகளில் எந்தவித தடையும் இல்லை. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள நகரத்தின் முக்கிய பகுதிகள் பிற்பகல் முதல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
விதிகளை மீறி நடப்போர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே கூறியிருந்ததன் பேரில், காவல்துறையினர், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.