கோவை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐ- க்கு மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதை வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது முடக்கத்தால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு வகைகளில் நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜன்தன் வங்கிகளில் 1 கோடி பெண்களுக்கு தலா ரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் மத்திய அரசின் பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் தேவைப்படுவோர்க்கு உணவுப் பொருள்கள் திட்டம் மூலம் 1 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 30 லட்சம் பேருக்கு மோடி கிட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 45 லட்சம் முகக்கவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் சுய சார்பு பாரதம் திட்டம் மூலம் ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையில் மட்டும் எம்எஸ்எம்இ நிதி திட்டம் மூலம் 10 சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர்.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களின் முடிவுதான் காரணம். எதிர்காலத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது. பெட்ரோல் டீசல் விலைகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சாத்தான்குளம் சம்பவ வழக்கு சிபிஐ வசம் அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது. கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு முழு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
பாஜக மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.