தமிழ்நாடு

சிஏஏ போராட்டம்: கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவு 

DIN

சிஏஏ போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த கைது நடவடிக்கை உத்தரவை நீதிபதிகள் நிறுத்திவைத்துள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்புகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் இந்தப் போராட்டம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னரும், அங்கு தொடர்ந்து போராட்டம் நடத்த அனுமதிப்பது ஏன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து ஏன் அப்புறப்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினர்.

மேலும், திருப்பூரில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி தான் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையை தடுப்பது எது என கேள்வி எழுப்பினர். போலீஸாரின் இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி தொடர் நடவடிக்கை எடுப்பதற்கான நோக்கமே அந்த இடத்தில் மீண்டும் எந்தவொரு போராட்டமும் நடைபெற்று விடக் கூடாது என்பதற்காகத் தான். போராட்டத்துக்கான உரிமை என்பதற்கும், பொது சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக போராட்டம் நடத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் உரிமை இல்லை. அதுபோல போராட்டம் நடத்த அனுமதித்தால், அது மிகப்பெரிய பேராபத்தை விளைவிக்கும்.

இந்தப் போராட்டம் எந்த நோக்கத்துக்காக நடைபெறுகிறது என்பதை விட போராட்டத்தால் ஏற்படும் விளைவுகள் தான் கவலைக் கொள்ளச் செய்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர் குறிப்பிட்டுள்ள திருப்பூரில், பள்ளி செல்லும் குழந்தைகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராகவோ, ஆதரவாகவோ எந்தவொரு போராட்டமும் நடத்த போலீஸார் அனுமதிக்கக்கூடாது. அதனை மீறினால், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிஏஏ போராட்டம் தொடர்பாக நேற்று பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT