தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, அதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் என்ன? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவில்லை என்றால் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியது ஏன்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கையில், என்.பி.ஆர். குறித்து சிறுபான்மையினருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்குவதற்காகவே என்.பி.ஆர் கணக்கெடுப்பில் கேட்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, என்.பி.ஆர் விவகாரத்தில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் அது சரி என்ற நிலைப்பாட்டை எடுப்பது சரியல்ல என்று ஸ்டாலின் பேசியதற்கு, 'தில்லியில் ஏற்பட்ட பதற்றம் போன்று தமிழகத்திலும் பதற்றம் ஏற்பட்டு விடக்கூடாது. அதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து விளக்கம் வந்தவுடன் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, என்.பி.ஆர். விவகாரத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது' என்று முதல்வர் பதில் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.