தமிழ்நாடு

அத்தியாவசியப் பொருட்களை வழங்க வெளியே வருவோருக்கு.. அரசின் அறிவுறுத்தல்

DIN

சென்னை: அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல வாகனங்களை இயக்குவோரும், வெளியே செல்வோரும் உரிய அடையாள அட்டையை வைத்திருக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்த தமிழக முதல்வர், ஊரடங்கு நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (26.3.2020) கரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அதாவது, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும். இது தொடர்பான கோரிக்கைகள் இருப்பின், அவற்றிற்கான அத்தியாவசிய சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்கள்.

அ) மருத்துவப் பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், அரசு மருத்துவமனை முதல்வர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள்  மற்றும் பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ஆகியோர் வழங்குவர்.

ஆ) அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்யும் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியார் பணியாளர்களுக்கும், சென்னை உட்பட அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர்முக உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இ) மின் வணிக நிறுவனங்களான Grofers, Amazon, Big basket, Flipkart, Dunzo போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பொருட்களை மற்ற நிறுவனங்களும், அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும், கூட்டுறவு விற்பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றது. 

ஈ) Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும்.

உ) எனினும், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் தாங்களாகவே சமைக்க இயலாதோர் ஆகியோர் மெஸ் மற்றும் சிறு சமையலகங்கள் மூலம் ஏற்கனவே தங்கள் உணவுகளை பெற்று வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படுகின்றது. 

ஊ) இத்தகைய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநர்கள், அடையாள அட்டை வைத்திருப்பதை சம்பந்தப்பட்ட வாகனங்களில் “அத்தியாவசிய சேவைக்காக” என்று வில்லைகள் ஒட்டியிருப்பதையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

எ) அதே போன்று, காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.

ஏ) வேளாண்மைத் துறை விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியத் துறை என்பதால், விவசாயத் தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்றது. அதே போன்று, வேளாண் விளை பொருட்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

ஐ) கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றது. இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், காவல் துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை கீழ்க்கண்ட எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2844 7701, 044-2844 7703 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT