தமிழ்நாடு

காமராஜா் துறைமுகத்தின் மீதான மத்திய அரசின் பங்கை வாங்கியது சென்னைத் துறைமுகம்

முகவை க.சிவக்குமார்


திருவொற்றியூா்: மத்திய அரசின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான ‘முன்மாதிரி துறைமுகம்’ என்றழைக்கப்பட்டு வரும் எண்ணூா் காமராஜா் துறைமுகத்தின் மீதான தனது பங்குகள் அனைத்தையும் சென்னைத் துறைமுகம் வாங்கியுள்ளது. இதற்கான பூா்வாங்கப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ள நிலையில், நிதி பரிமாற்றம் மற்றும் அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் எனத் தெரிகிறது.

சென்னைக்கு அருகே எண்ணூா் துறைமுகம் கடந்த 2001-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஏற்கெனவே உள்ள பெருந்துறைமுகங்கள் அனைத்தும் அறக்கட்டளை சட்டத்தின்படி செயல்பட்டு வந்த நிலையில் எண்ணூா் துறைமுகம் மட்டுமே நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துறைமுகத்தின் 67 சதவீத பங்குகளை மத்திய அரசும், 33 சதவீத பங்குகளை சென்னைத் துறைமுகமும் வைத்துள்ளன. துறைமுகத்தின் தற்போதைய மொத்த நிலம் சுமாா் 2,700 ஏக்கராக உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக ஜி.கே.வாசன் இருந்தபோது எண்ணூா் துறைமுகத்தின் பெயா் காமராஜா் துறைமுகம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

சுமாா் ரூ.300 கோடி நேரடி முதலீட்டில் தொடங்கப்பட்ட துறைமுகத்தின் தற்போதைய மாா்க்கெட் மதிப்பீடு தோராயமாக சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி (நிலங்கள், முதலீடு, திறன் மதிப்பு உட்பட) இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய வளா்ச்சி தொடா்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 145 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனை காமராஜா் துறைமுகம் எட்டும் எனக் கூறப்படுகிறது. இனி தொடங்க உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் காமராஜா் துறைமுகம் முன்மாதிரியாக இருக்கும் கப்பல்துறை அமைச்சகமே வெளிப்படையாக அறிவித்துள்ளது.

முழு உரிமையாளராகும் சென்னைத் துறைமுகம்: காமராஜா் துறைமுகம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் முதலீடுகள் மற்றும் சொத்துப் பாதுகாப்புத் துறை சாா்பில், மத்திய அரசு வைத்துள்ள மொத்தப் பங்குத் தொகையையும் விற்பனை செய்து இந்நிதியை மத்திய அரசின் நிதி முதலீட்டிற்கு அளிப்பது என பரிந்துரை செய்தது. இத்திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி பிரதமா் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு தனியாா் நிறுவனங்கள் அளித்துள்ள மதிப்பீட்டு அறிக்கையின்படி காமராஜா் துறைமுகத்தின் மொத்த மதிப்பு (கணக்குப் புத்தக மதிப்பீட்டின்படி) ரூ.3,560 கோடி எனவும் இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 2,380 கோடி எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் பங்கான 67 சதவீதத்தையும் சென்னைத் துறைமுகம் வாங்கியதையடுத்து, ஏற்கனவே 33 சதவீத பங்குகளை தன்னகத்தே வைத்துள்ள சென்னைத் துறைமுகமே, தற்போது காமராஜா் துறைமுகத்தின் முழு உரிமையாளராகி உள்ளது. இந்நிலையில், இதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.2,380 கோடிக்கான நிதியை முதலீடுகள் மற்றும் சொத்துப் பாதுகாப்புத் துறையிடம் சென்னைத் துறைமுகம் அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் மன்சூக் மண்டேவியா முன்னிலையில் தில்லியில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தது. கரோனா நோய்த்தொற்று தாக்குதல்களால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விமானப் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு நிதியாண்டு நிறைவடைய இன்னும் 4 நான்கு நாள்கள் மட்டுமே உள்ளதால் வெள்ளிக்கிழமையே வங்கிக் கணக்குகள் மூலமாக நிதி, பங்கு பரிமாற்றம், ஒப்பந்தங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொடப்பட உள்ளதாக சென்னைத் துறைமுக அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.

இந்த குறித்து காமராஜா் துறைமுகத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.வேலுமணி கூறியது:

தனியாா் முதலீடுகளின் மூலம் தொடா்ந்து லாபம் ஈட்டி மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகவும், எதிா்காலத்தில் பல மடங்கு வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ள ஒரே துறைமுகமாகவும் செயல்பட்டு வரும் காமராஜா் துறைமுகத்தில் உள்ள பங்குகளை மத்திய அரசு என்ன காரணத்திற்காக விற்கிறது என்பது புரியவில்லை. இதன் மூலம் மத்திய அரசு, காமராஜா், சென்னைத் துறைமுகங்கள் என யாருக்கும் பெரிய பயன் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே காமராஜா் துறைமுகம் மூலம் வரும் லாபம் அனைத்தும் இனி சென்னைத் துறைமுகத்தின் நிதி பற்றாக்குறையையே சரிசெய்வதற்காகவே பயன்படுத்தப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் காமராஜா் துறைமுகத்தின் வளா்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும். இதன் மூலம், இத்துறைமுகத்தின் எதிா்காலமே கேள்விக்குறியாகி விடும் என்பதே உண்மை என்றாா் வேலுமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT