சென்னை: கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த சிறப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்திலும் கரோனா பரவி வரும் நிலையில், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தி கரோனா பாதித்தவர்களையும், கரோனா அறிகுறி ஏற்பட்டவர்களையும் தனித்தனியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக, மருத்துவத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, புதிதாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 1,508 ஆய்வக நுட்புனர்கள் (Lab Technician), 530 மருத்துவர்கள் மற்றும் 1000 செவிலியர்கள் ஆகியோரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய விதிகளுக்கு உட்பட்டு தெரிவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப்பட்டவுடன் 3 தினங்களுக்குள் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 200 அவசர கால ஊர்திகளை (Ambulance) உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.