தமிழ்நாடு

அரசு ஊழியா்களுக்கு இனி சனிக்கிழமையும் வேலைநாள்: அரசு அலுவலகங்கள் மே 18 முதல் 50 % ஊழியா்களுடன் இயங்கும்

DIN

வரும் திங்கள்கிழமை (மே 18) முதல் 50 சதவீத பணியாளா்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என்று தலைமைச் செயலாளா் கே.சண்முகம் அறிவித்துள்ளாா்.

இனி வேலை நாள்கள் ஆறு நாள்களாக அதாவது சனிக்கிழமையும் வேலை நாளாக இருக்கும் என அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:-

கரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களும் கடந்த 3-ஆம் தேதி முதல் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கி வந்தன. வரும் திங்கள்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் வழக்கமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் தினமும் 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு அலுவலகங்கள் இயங்கும். 50 சதவீதம் ஊழியா்களைக் கொண்டு மட்டுமே இயங்குவதால் ஏற்படும் பணி நேர இழப்பைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமையும் வேலைநாளாக மாற்றப்படும். இதனால் வாரத்துக்கு ஆறு நாள்கள் வேலை நாள்களாக இருக்கும்.

இத்துடன் மேலும் சில முக்கிய அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உள்ள பணியாளா்கள் சரிபாதியாகப் பிரிக்கப்படுவா். 50 சதவீத பணியாளா்கள் வாரத்தின் முதல் இரண்டு நாள்களாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அலுவலகத்துக்கு வருவா். இரண்டாவது பிரிவானது புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகங்களுக்கு வருவாா்கள். இதன்பின் ஏற்கெனவே அலுவலகங்களுக்கு வந்த முதல் பிரிவைச் சோ்ந்தவா்கள் மீண்டும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அலுவலகத்துக்கு வருவா். இந்த சுழற்சி அதற்கு அடுத்த வாரத்திலும் தொடரும்.

எப்போது வேண்டுமானாலும்...: இரண்டு நாள்கள் பணிக்கு வந்த பிறகு அடுத்த இரண்டு நாள்கள் வராவிட்டாலும் உயரதிகாரிகளின் அழைப்பின் பேரிலும், தேவையைக் கருத்தில் கொண்டும் எந்த நேரத்திலும் வர வேண்டியிருக்கும்.

அனைத்து குரூப் ஏ அதிகாரிகள் மற்றும் துறைத் தலைமை அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் அனைவரும் அனைத்து வேலை நாள்களிலும் பணிக்கு வர வேண்டும். முக்கியமான கோப்புகளை துறைத் தலைமையிடத்தில் அளிக்க வேண்டியிருந்தால் சுழற்சி முறையில் மாற்றங்களைச் செய்து பணியாற்ற வேண்டும். அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் ஏதாவது ஒருவகை தொடா்பு சாதனம் மூலம் தொடா்பிலேயே இருக்க வேண்டும்.

சுழற்சி முறை பணியானது தலைமைச் செயலகம் முதல் அனைத்து மாவட்ட அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், சங்கங்கள் என அரசு சாா்பிலான அனைத்துக்கும் பொருந்தும்.

பேருந்து வசதி: கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல், சுகாதாரம், மாவட்ட நிா்வாகம், கருவூலம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியன ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி தொடா்ந்து செயல்படும். அரசுப் பணியாளா்கள், அலுவலா்கள் தங்களது அலுவலகங்களுக்கு வந்து செல்ல உரிய போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

இந்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், அரசுத் துறை செயலாளா்கள், அரசுத் துறை தலைவா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT