கோடியக்கரை: நாய்கள் துரத்தியதால் கடலில் குதித்து உயிருக்குப் போராடிய மானை மீட்ட மீனவர்கள்
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் நாய்கள் துரத்தியதால் கடலில் விழுந்து நீந்திய நிலையில் உயிருக்குப் போராடிய புள்ளி மானை மீனவர்கள் படகில் சென்று வியாழக்கிழமை மீட்டு கரை சேர்த்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் நாய்கள் துரத்தியதால் கடலில் விழுந்து நீந்திய நிலையில் உயிருக்குப் போராடிய புள்ளி மானை மீனவர்கள் படகில் சென்று வியாழக்கிழமை மீட்டு கரை சேர்த்தனர்.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் அரிய இன வெளி மான்கள் மற்றும் புள்ளிமான், நரி,முயல், மட்டக் குதிரைகள், குரங்கு என பல இன வன விலங்குகள் பாதுகாக்கப்படுகிறது.
இங்கு சில நேரங்களில் அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறி திறந்த வெளி அல்லது கடற்கரையில் இரை, தண்ணீர் தேடிச் செல்லும் மான்களுக்கு நாய்களால் தொல்லைகள் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஆண் புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்திதியுள்ளது. தப்பித்துக் கொள்ள ஓடிய மான், ஒரு கட்டத்தில் கடலில் குதித்து நீந்தியது. தற்போது கடல் அலை வேகமாக இருப்பதால் மான் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
அப்போது, அந்த பகுதியில் கரை வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜோசப் உள்ளிட்ட மீனவர்கள் தாங்கள் இருந்த கண்ணாடியிழை படகில் சென்று மானை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உயிர் தப்பிய அந்தமான் துள்ளி குதித்து வனப் பகுதிக்குள் சென்றது. இந்த மீட்பு பணியின்போது மீனவர் ஒருவர் தனது செல்லிடப்பேசியில் காட்சி படுத்தியுள்ளார்.
மான் கடலுக்குள் வெகு நேரம் நீந்தி உயிருக்கு போராடுவது, அதன் அருகே சென்ற மீனவர்கள் மானை மீட்டு படகுடன் இணைத்து கரை சேர்க்கும் காட்சிகள் விடியோவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிப் படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.