'தீபாவளி ஊக்கத் தொகையாக பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்'
தீபாவளி ஊக்கத் தொகையாக பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மன்னார்குடி: கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோயில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டும் வகையில், தலா ரூபாய் 5 ஆயிரம் கோயில் நிதியிலிருந்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாரூர், தஞ்சை மாவட்ட கோயில் பூசாரிகள் நலச் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி.சேட்டு, மாவட்ட துணைத் தலைவர் என்.கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கோயில் பூசாரிகள் நலவாரியத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பூசாரிகளுக்கு மாதம் ரூபாய் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பினை உடனடியாக அரசாணையாக வெளியிடுவதுடன், முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். கிராமபுற பூசாரிகளுக்கு மாவட்டம் தோறும் வழிபாட்டு பயிற்சி முகாம் நடைபெற வேண்டும்.
Advertisement
கரோனா கால பொதுமுடக்கத்தினால் கோயில் திருவிழாக்கள் தடை ஏற்பட்டுள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து தட்டுக் காணிக்கை நம்பியே வாழ்வாதாரமாக கொண்ட பூசாரிகள், அர்ச்சகர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் அவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் கோயில் நிதியிலிருந்து தலா ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு கலந்துகொண்டனர். இதில் மாநில பொருளாளர் கே.சுந்தரம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.