முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் சுவரை துளையிட்டு சைக்கிள் கடையில் ரூ.1.73 லட்சம் திருட்டு

விழுப்புரத்தில் சுவரை துளையிட்டு சைக்கிள் கடைக்குள் நுழைந்த திருடர்கள், பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.73 லட்சத்தை திருடிச் சென்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
விழுப்புரத்தில் சுவரை துளையிட்டு சைக்கிள் கடையில் ரூ.1.73 லட்சம் திருட்டு
பகிர்:

விழுப்புரத்தில் சுவரை துளையிட்டு சைக்கிள் கடைக்குள் நுழைந்த திருடர்கள், பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.73 லட்சத்தை திருடிச் சென்றனர்.

விழுப்புரம் நகரில் உள்ள நேருஜி சாலையில் பிரபல சைக்கிள் கடை இயங்கி வருகிறது. இங்கு சிறுவர்களுக்கான சைக்கிள் முதல் பெரியவர்களுக்கான சைக்கிள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

இக்கடையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சைக்கிள்கள் மற்றும் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த கடையை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனர்.

Advertisement

இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு அந்த கடையின் சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்து, பணப் பெட்டியில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

வழக்கம்போல திங்கள்கிழமை காலை  9.30 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர். அப்போது, கடையின்  சுவரில் துளையிட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பணப் பெட்டியில் இருந்த ரொக்கம் திருட்டு போயிருந்தது தெரிந்தது.

உடனே, இது குறித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் கடையின் மேலாளர் சிவசங்கரன் (44) புகார் செய்தார்.  பின்னர் காவல்துறையினர் அந்தக் கடைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

 இதில், சைக்கிள் கடைக்கும், அந்த கடைக்கு அருகிலுள்ள தங்கும் விடுதிக்கும் இடையே ஆள் நடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியில் நுழைந்த மர்ம நபர்கள் சைக்கிள் கடையின் சுவரில் 2 அடி அகலத்துக்கு துளையிட்டுள்ளனர். பின்னர், உள்ளே புகுந்து பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

பின்னர், விரல்ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

விழுப்புரம் நகரின் மையத்தில், பிரதான சாலையை ஒட்டிய பகுதியில் உள்ள கடையின் சுவரை மர்ம நபர்கள் துளையிட்டு பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments