அருப்புக்கோட்டையில் தீயணைப்புத் துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்
அருப்புக்கோட்டையில் பொதுமக்களிடையே லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்ட தீயணைப்புத் துறையினர்.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியின் முக்கியப் பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை (அக்.27 முதல் நவ 2 வரை) ஒட்டி விருதுநகர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அலுவலக உத்தரவின்படி அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஜெயப் பாண்டி தலைமையில் திங்கள்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையம் அறிவித்தபடி, "விழிப்பான இந்தியா, செழிப்பான இந்தியா " எனும் வாசகங்களும், லஞ்சம் கொடுப்பதும்,வாங்குவதும் குற்றம் எனும் வாசகங்களும் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி காந்தி நகர் , புதிய பேருந்து நிலையம் , மதுரைச் சாலை மற்றும் முக்கியக் கடைவீதிகளில் பொதுமக்களிடையே தீயணைப்புத் துறையினர் லஞ்ச ஒழிப்பு குறித்து எடுத்துக் கூறினர்.
அதனை அப்பகுதிகளில் இருந்த பொதுமக்கள் திரண்டு நின்று, கண்டு, விழிப்புணர்வு பெற்றனர்.