பல்லடம் அருகே வலையபாளையத்தில் 3 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்: 4 பேர் கைது
பல்லடம் அருகே வலையபாளையத்தில் குட்கா புகையிலை விற்பனை செய்த 4 பேரை மங்கலம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலையபாளையத்தில் தனியார் விசைத்தறி குடோனில் இருந்து 3 ஆயிரத்து 690 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விநியோகத்திற்கு பயன்படுத்திய ஒரு கார், ஒரு மினி சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பூமலூர் ஊராட்சி வலையபாளையம் கிராமத்தில் மறைந்த கருப்புசாமி கவுண்டர் மகன் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான வண்ணாந்தோட்டத்தில் உள்ள பயன்பாடு இல்லாத விசைத்தறி கூடத்தை வாடகைக்கு எடுத்து அதனை குட்கா புகையிலைப் பொருள்களை இருப்பு வைக்கும் குடோனாக கடந்த சில மாதங்களாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதுபற்றிய ரகசிய தகவல் மங்கலம் போலீஸாருக்கு கிடைத்ததைத் தொடர்ந்து பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமசந்திரன் உத்தரவின் பேரில் மங்கலம் காவல் ஆய்வாளர் நீலாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அய்யாசாமி, அன்புராஜ், ராஜ்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு புதன்கிழமை இரவு சென்றனர்.
அங்கு குடோனில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டு இருந்த அரசால் தடை செய்யப்பட்ட 3ஆயிரத்து 690 கிலோ எடையுள்ள குட்கா, விமல், ஹான்ஸ் போன்ற புகையிலை பாக்கு பொருள்களை பறிமுதல் செய்ததோடு அக்குடோனில் இருந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் காளிவேலம்பட்டி ராசாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் அரவிந்தராஜ் (24), பொல்லிகாளிபாளையம் புஷ்பராஜ் மகன் முத்துகிருஷ்ணன்(35), கோவை சுந்தராபுரம் சந்திரசேகர் மகன் சாஜி பிரசாத்(43), பல்லடம் சின்னூர் ஜெயராஜ் மகன் வைகுண்டராஜன்(38) ஆகியோர் என்பதும் இவர்கள் பல்லடம், திருப்பூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு புகையிலை பாக்கு பொருள்களை கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.
புகையிலைப் பொருள்கள் விநியோகத்திற்கு பயன்படுத்திய ஒரு கார், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இதில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா, எங்கு இருந்து புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.