முகப்பு
தமிழ்நாடு

திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி

சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி
பகிர்:

சென்னை: மனுஸ்மிருதி குறித்து பேசி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் காசி ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல. மனுஸ்மிருதி குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது. இதுபோன்ற தேவையற்ற விளக்கங்களை அவர் அளித்திருக்க கூடாது. அவரது சர்ச்சைப் பேச்சு காரணமாக அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது.

அவர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேசி வருவதால்,  நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக் கொண்ட, பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளார். எனவே  தனது சொந்த அரசியல் லாபத்துக்காக, இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது. மனுஸ்மிருதி சட்ட புத்தகமும் இல்லை, மனுஸ்மிருதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா? என்பதும் தெரியாது என தெரிவித்தனர். 

அப்போது மனுதாரர் தரப்பில், எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற்று விரிவான மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். இதனை மனுதாரர் தரப்பு ஏற்றுக் கொண்டதையடுத்து, மனுவை திரும்பப் பெற அனுமதியளித்த நீதிபதிகள், உரிய அரசியல் சட்ட பிரிவுகளை குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தனர். மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →