சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்
கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கோவை: கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை அணிந்து 48நாள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக கோவையில் சுமார் 51 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கி உள்ளனர்.
மூலவர் ஐயப்பன் விக்கிரகத்துக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மாலை அணிந்த குருசாமிகள் கன்னிசாமிகளுக்கு மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர்.
கரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஐயப்ப பக்தர்கள் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் மாலை அணிந்து கொண்டனர். முன்னதாக கோவிலின் வாயிலில் பக்தர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே கோயில் வளாகத்துக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா பரவல் காரணமாக மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு முன் பதிவுகளின் அடிப்படையில் தினமும் 1000-பக்தர்கள் மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் முன்பதிவு செய்து சபரிமலைக்கு செல்ல இயலாத மாலையணிந்த பக்தர்களின் வசதிக்காக சபரிமலை கோவில் நடைமுறைகளை பின்பற்றி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் முதன்முறையாக 48 நாட்கள் சிறப்பு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தரிசனத்திற்காக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சபரிமலை தேவஸ்தானம் தீவிரப்படுத்தியுள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் வைரஸ் பாதிப்பு இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல பம்பை நதிக்கரையில் பக்தர்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றாக பம்பையில் ஷவர் அமைத்து பக்தர்களுக்கு குளிக்க வசதிகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.