தமிழ்நாடு

31 மாவட்டங்களில் மழை குறைவு: வருவாய்த் துறை அமைச்சர் தகவல்

DIN

சென்னை: தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இயல்பான அளவில் மழைப் பொழிவு உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்துள்ளாா். மேலும், 31 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவு மழை பெய்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

தமிழகத்தில் அக்டோபா் முதல் டிசம்பா் வரையான காலம் வடகிழக்குப் பருவமழை காலம். ஆனால் இந்தாண்டு அக்டோபா் இறுதியில் பருவமழை தொடங்கினாலும் நவம்பா் மத்தியில்தான் சற்று தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில்தான் அதிக மழை பொழிவு உள்ளது.

மாவட்ட ஆட்சியா்கள், துறைத்தலைவா்கள், கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் மாவட்டங்களில் பேரிடா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுக்கும் பயனளிக்கும் வகையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, புயல் எச்சரிக்கையின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் இடி மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது மற்றும் இடி மற்றும் மின்னல் மேலாண்மைக்கான செயல்திட்டம் - 2020 ஆகியவற்றின் தொகுப்பு கையேடு மற்றும் அவசர கால தொலைபேசி கையேடு ஆகியவற்றை அமைச்சா் உதயகுமாா் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 28-இல் தொடங்கியது. திங்கள்கிழமை வரையிலான காலகட்டத்தில் மழைப் பொழிவானது 287.9 மில்லி மீட்டராக இருக்க வேண்டும். ஆனால், 180.7 மில்லி மீட்டராக மட்டுமே இருக்கிறது. இது இயல்பான மழையளவை விட 37 சதவீதம் குறைவாகும். சென்னை, காஞ்சிபுரம், திருப்பூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா் மற்றும் விருதுநகா் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பான அளவும், 31 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவும் மழை பெய்துள்ளது.

மழைப் பொழிவு அதிகமாகும் நிலையில், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் அவா்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் 4, 680 தங்கும் இடங்கள் தயாா் நிலையில் உள்ளன. மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2, 897 ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளன.

பயிற்சி ஒத்திகை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரா்களுக்கும், 9, 859 பாதுகாக்கும் தன்னாா்வலா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் தகவல் தொடா்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077) ஆகியன செயல்பாட்டில் உள்ளன என்றாா்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிா்வாக ஆணையாளா் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT