தமிழ்நாடு

தீபத் திருவிழா குறித்து கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

DIN

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி 4 மாட வீதிகளில் தேர்த் திருவிழாவை நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர்த் திருவிழாவை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பூரி ஜெகந்நாதர் கோயில் திருவிழாவை நடத்தியதைப் போன்று, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் திருவிழாவையும் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத் துறை தரப்பில், தீப திருவிழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயிலுக்குள் தேர்த் திருவிழா நடத்தப்படும் என  விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், தீப திருவிழாவை தவிர்த்து மற்ற நாள்களில் 5000 பேரை அனுமதிப்பதாகக் கூறும்போது, உற்சவ மூர்த்திகள் ஊர்வலம், தேர்த் திருவிழாவை மாட வீதிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மாடவீதிகளின் நுழைவு வழிகளைத் தடை செய்தால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், தீப திருவிழாவையொட்டி, வரும் நவம்பர் 29-ஆம் தேதி தவிரப் பிற நாள்களில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுவர். கரோனா காரணமாக உற்சவ மூர்த்திகளும், தேர்த் திருவிழாவும் கோயில் வளாகத்துக்குள் நடத்தப்படும்.

வரும் நவம்பர் 29-ஆம் தேதி  பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நவம்பர் 30-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வரை தெப்பத் திருவிழா கோயில் வளாகத்துக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடத்தப்படும். இந்த திருவிழாவுக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக மக்கள் கூடுவதை அனுமதிக்கும் அரசு, மத ரீதியான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் உற்சவர் ஊர்வலம், தேர்த் திருவிழாவை மாட வீதிகளில் நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். 

பொதுநலனை கருதியே அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. அதனைக் குறை கூற முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இயல்புநிலை திரும்பிய பின்னர், கார்த்திகை தீப திருவிழா வழக்கமாக நடக்கும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT