திருப்பூரில் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டுக் கொலை
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர்: திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் கோல்டன் நகர் 2 ஆவது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(36), பெயிண்டிங் தொழிலாளியான இவர் தனது தாய் ஜெயந்தியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சுரேஷ்குமாருக்கும், அவரது வீட்டின் அருகில் குடியிருந்து வரும் செல்வம்(38) என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சுரேஷ்குமார் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அரைகுறை ஆடைகளுடன் வீட்டில் அருகில் படுத்துக் கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த செல்வம், சுரேஷ்குமாரை எச்சரித்துள்ளார்.
ஆனால் மதுபோதையில் இருந்த சுரேஷ்குமார் தகாதவார்த்தையால் அவரைத் திட்டியதாகத் தெரிகிறது. இதனால ஆத்திமடைந்த செல்வம் அருகில் இருந்த கல்லைத்தூக்கி சுரேஷ்குமார் மீது போட்டதாகக் கூறப்படுகிறது.
இதில்,உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேஷ்குமாரை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்தாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, செல்வத்தைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.