தமிழ்நாடு

வாழப்பாடியில் கடலூர்-தம்மம்பட்டி சாலை சந்திப்பு சீரமைக்கப்படுமா? 

DIN

வாழப்பாடி: வாழப்பாடியில், கடலுார்-தம்மம்பட்டி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அரசமரத்தை மையமாக வைத்து ரவுண்டானா அமைத்து, சாலையை விரிவுபடுத்திட நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வு நிலை பேரூராட்சி, 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதிக்கு மட்டுமின்றி வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்திற்கும் வசதியாக இருப்பதால், சுற்றுப்புற கிராமங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களும், கிராமப்புற தொழிலாளர்கள், வியாபாரிகளும் வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் குடியேறி வருகின்றனர்.

இதனால், வாழப்பாடிக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் மட்டுமின்றி, சேலம், ஆத்துார், ராசிபுரம் பகுதியில் செயல்படும்  தனியார் கல்வி நிறுவனங்கள், நுாற்பாலைகள், ராம்கோ சிமெண்ட்  நிறுவனம் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், கடந்த சில ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து இருமடங்காக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வாழப்பாடி காவல் நிலையம் அருகே, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட கிராமங்களை வாழப்பாடியுடன் இணைக்கும் தம்மம்பட்டி பிரதான சாலை, வாழப்பாடியின் இதயப்பகுதியான கடலுார் சாலையுடன் இணைகிறது. இச்சாலை சந்திப்புக்கு மிக அருகிலேயே ரயில் நிலையமும் அமைந்துள்ளது.
சேலம், விருதாச்சலம் ஆகிய இரு மார்க்கத்திலும் பயணிகள், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி தம்மம்பட்டி சாலை மூடப்படுகிறது.

கடலுார்-தம்மம்பட்டி சாலை சந்திப்பு கிழக்குப்புறத்தில் கழிவுநீர் சாக்கடை திறந்து கிடப்பதால் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் நிலை தடுமாறி நிற்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி, இருவழி சாலை தடுப்புகள் இல்லாததால் தம்மம்பட்டி சாலையில் இருந்து கடலுார் சாலைக்கு வரும் வாகனங்களும், கடலுார் சாலையில் இருந்து தம்மம்பட்டிச் சாலைக்கு செல்லும் வாகனங்களும் எதிரெதிரே செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து  அபாயமும் நீடித்து வருகிறது.

எனவே,போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த தம்மம்பட்டி-கடலுார் சாலை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டு பழமையான அரச மரத்தை மையமாக வைத்து ரவுண்டானா அமைக்க வேண்டும்.  தம்மம்பட்டி சாலையில் இருந்து வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதிக்கு செல்லும் வாகனங்களை அரசமரத்தின் மேற்கு பகுதியில், புதிய மகளிர் காவல் நிலையத்திற்கு முன்பாக சாலையை விரிவுபடுத்தி வேண்டும். பேளூர் சாலை பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அரச மரத்திற்கு கிழக்கு பகுதி சாலையில் செல்வதற்கும் மாற்றம் செய்ய வேண்டும்.

வாழப்பாடி பகுதியில் நீடித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வுகாண, தம்மம்பட்டி சாலை பசந்திப்பு பகுதியில் ரவுண்டானா, சாலை தடுப்புகள் மற்றும் சாலை விரிவுபடுத்தும் பணிகளை, வாழப்பாடி நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் காவல்த்துறையுடன் இணைந்து விரைந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, வாகனஓட்டிகள், பயணிகளிடையேயும் கோரிக்கை எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT