திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முடி திருத்தும் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முடி திருத்தும் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் குரும்பம்பட்டி கிராமத்தில் மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், தாமதமாகும் பட்சத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் முடி திருத்தும் தொழிலாளர்கள் தமது கடைகளை அடைத்து கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் வீரசோழன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.