திண்டிவனம் அருகே ரூ. 15 லட்சத்தை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!
திண்டிவனம் அருகே வீட்டிலிருந்த கார் ஓட்டுனரை கட்டிப்போட்டுவிட்டு, ரூ. 15 லட்சத்தை திருடிக்கொண்டு, மர்ம நபர்கள் வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே வீட்டிலிருந்த கார் ஓட்டுனரை கட்டிப்போட்டுவிட்டு, ரூ. 15 லட்சத்தை திருடிக்கொண்டு, மர்ம நபர்கள் வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் மணிகண்டன்(27). சென்னை குன்றத்தூரில் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்தவிட்டதால், தனது தாய் ஜெயலட்சுமி (48) என்பவருடன் குன்றத்தூர் சென்று விட்டார்.
இந்நிலையில், அண்மையில் ஊருக்கு வந்திருந்த மணிகண்டன் தனது சொந்த ஊரான நடுவனந்தலில் உள்ள கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை காலை தூங்கி கொண்டிருந்தபோது, அதிகாலை மணியளவில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் வந்து, தன் கை, கால், வாயினை கட்டி விட்டு, வீட்டில் வைத்திருந்த ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, தனது கூரை வீட்டையும் கொளுத்திவிட்டு சென்றுவிட்டனர் என கூறியுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் வந்து வீட்டின் வெளியே கட்டியிருந்த மணிகண்டனை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார். திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்து மற்றும் திருட்டு சம்பவம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் மணிகண்டனிடம் திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன், வெள்ளிமேடுபேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.