முகப்பு
தமிழ்நாடு

மெஹபூபா முஃப்தி விடுவிப்புக்கு மு.க. ஸ்டாலின் வரவேற்பு

தடுப்புக் காவலில் இருந்த மெஹபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
மு.க. ஸ்டாலின்
பகிர்:

தடுப்புக் காவலில் இருந்த மெஹபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

கடந்த 14 மாதங்களாக தடுப்புக் காவலில் இருந்த ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி (60) செவ்வாய்க்கிழமை இரவு விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 

மெஹபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். அதேநேரத்தில் தடுப்புக் காவலில் உள்ள பிற அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இடைநிறுத்தப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது மெஹபூபா முஃப்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவா் மீது கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது அரசு இல்லத்தில் தடுப்புக் காவலில் அவா் வைக்கப்பட்டார். பின்னா் அந்த இல்லத்தையே அவருக்கான சிறையாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், அவர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்வதாக செவ்வாய்க்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அறிவித்தது. இதையடுத்து அவர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக, மெஹபூபாவை விடுவிக்கக் கோரி அவரது மகள் இல்திஜா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் இருநாள்களில் விசாரிக்க இருந்த நிலையில், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமா் அப்துல்லா ஆகியோா் கடந்த மாா்ச் மாதம் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.