'தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக்கூட அரசை கேள்வி கேட்க உரிமை இல்லை' - கனிமொழி
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவலுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 18 நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருப்பதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற அவை தொடங்குவதற்கு முன்னதாக, கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
மேலும், கூட்டத் தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசின் முடிவு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்ற கருத்து மேலோங்கி வருகிறது.
இதையடுத்து திமுக எம்.பி. கனிமொழி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை ரத்து செய்துள்ள பாஜக அரசின் முடிவு, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக்கூட அரசாங்கத்தை கேள்வி கேட்க உரிமை இல்லை” என்ற ஒற்றைச் செய்தியை தெளிவாக எடுத்துரைக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.