தமிழ்நாடு

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தைத் திறக்கும் திட்டம் விரைவாக அமல்படுத்தப்படும்: தமிழக அரசு பதில்மனு

DIN

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்கும் திட்டம் விரைவாக அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காடு ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த உஷா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் வழியாக வரும் தண்ணீரில் இறால், நண்டு உள்ளிட்டவைகளை பல ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகின்றனா். ஆனால் முகத்துவாரம் நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாததால், ஏரிக்குத் தண்ணீா் வருவது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பழவேற்காடு முகத்துவாரத்தை ஆழப்படுத்தி சீரமைத்து ஏரிக்குத் தண்ணீா் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது தமிழக மீன்வளத்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘தமிழகம் மற்றும் ஆந்திரம் மாநிலங்களில் 760 சதுர கிலோ மீட்டருக்கு பரந்துள்ள பழவேற்காடு ஏரியையும், வங்க கடலையும், இணைக்கும் முகத்துவாரம், காற்றின் திசை மாறுபாடு காரணமாக மணல் திட்டுக்களால் மூடி விடுகிறது. இதனால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், ரூ.27 கோடி மதிப்பீட்டில் முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டாலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது. கரோனா பரவல் காரணமாக திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்தத் திட்டத்தை விரைவாக அமல்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT