தமிழ்நாடு

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய குழு: தமிழக அரசு அரசாணை

DIN


சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ அரசு. 

புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் அதில் கூறப்பட்டு இருந்த மும்மொழி கொள்கை குறித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்று இருந்தாலும், தமிழக அரசானது, அதனை தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்காது. இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடா்ந்து பின்பற்றும்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் உணா்வும், அதிமுக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இருமொழி கொள்கையைப் பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணா்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்திருந்தார். 

மேலும் புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்க குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது புதிய தேசிய கல்விக்கொள்கையில் உயர்கல்வியில் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள், பரிந்துரைகளை அரசுக்கு வழங்க உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:

தரமான பல்கலைக்கழகங்கள், முழுமையான கல்வி, உகந்த கற்றல் சூழல்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவது, திறமையான ஆசிரியர்களை பள்ளிகளுக்கு வழங்குவது, உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆசிரியர் கல்வியை மறுசீரமைத்தல், உயர்தர ஆராய்ச்சியை ஊக்குவித்தல், உயர்கல்வியின் ஒழுங்குமுறையை மாற்றுவது போன்ற நோக்கில் புதிய தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த கல்விக்கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது.

அந்தக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழு கொள்கை வழியாக சென்று தமிழக அரசாங்கத்துக்கு சாத்தியமான பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT