கட்டாயக்கல்விச் சட்டம் : பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆஜராக உத்தரவு
தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காணொலி மூலம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செலவுத் தொகையை வழங்காதது தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு துவக்க, நடுநிலை, தனியார் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 2016-2017ஆம் ஆண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத் தொகையாக நிர்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகை 2017-2018 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு அரசு சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு 11 ஆயிரம் என செலவு நிர்ணயித்தது தவறானது. எனவே கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020 ஆகிய 3 ஆண்டுகளில் மாணவருக்கான கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-2021ம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகளுக்கான தொகையை 6 வாரங்களில வழங்கவும், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. மேலும், கல்விச் செலவுத் தொகையை குறைத்தது தொடர்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் காணொலி காட்சி மூலம் விசாரித்தார்.
அப்போது அரசு தரப்பில், உத்தரவை அமல்படுத்த மேலும் 4 வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஏற்கனவே இரு முறை அவகாசம் வழங்கியும் நிலுவைத் தொகையை வழங்காததை சுட்டிக்காட்டி, விசாரணையை வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் காணொலி காட்சி மூலம் பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.