முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

புதுச்சேரியில் கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த  முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தக் கோரிய  வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
புதுச்சேரி
பகிர்:

புதுச்சேரியில் கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த  முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தக் கோரிய  வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகந்நாதன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி மாநில அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. எனவே, கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வரை புதுச்சேரியில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும்.

புதுச்சேரிக்கான கரோனா தடுப்பு திட்டத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். பொதுமுடக்க காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 5 ஆயிரம் நிவாரண உதவியும், உணவுப் பொருள்களும் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கரோனா நோய்த் தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலர், மத்திய சுகாதாரத்துறை செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர், சுகாதாரத் துறை செயலர், மாவட்ட ஆட்சியர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாகி, ஏனாம் தலைமைச் செயல் அதிகாரிகள் ஆகியோர் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.